
வரும் ஜூலை 2-ல் பிரதமர் நரேந்திர மோடியின் 5 நாடுகள் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்திய அரசு மேற்கொள்ளவுள்ள உதவிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரேசில் நாட்டிற்குச் செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அத்துடன் நமீபியா, கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளுக்கும் அரசு முறைப் பயணமாகச் செல்லவிருப்பதாக கடந்த ஜூன் 27 அன்று செய்தி வெளியானது.
பிரதமரின் இந்த ஐந்து நாடுகள் சுற்றுப்பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின், பொருளாதார உறவுகள் துறையின் செயலராக உள்ள தம்மு ரவி செய்தியாளர்களை சந்தித்து இன்று (ஜூன் 30) விளக்கமளித்தார்.
வரும் ஜூலை 2-ல் இந்தியாவில் இருந்து கிளம்பும் பிரதமர் மோடி நேரடியாக ஆப்பிரிக்க நாடான கானாவிற்கு செல்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் கானாவிற்கு இந்திய பிரதமர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. பிரதமரின் இந்த பயணத்தின்போது விவசாயம், தடுப்பூசி ஆராய்ச்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
குறிப்பாக இந்திய அரசின் உதவியுடன் கானாவில் தடுப்பூசி மையம் அமையவிருக்கிறது. கானாவின் சுகாதார உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய அளவில் உதவியளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தில் கானா அதிபர் ஜான் மாஹாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரேசில், அர்ஜென்டினா, டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் மோடி, இறுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு ஜூலை 9-ல் செல்கிறார்.
இந்தியாவின் யுபிஐ தொழில்நுட்பத்தை நமீபியாவில் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று செயலர் தம்மு ரவி அறிவித்தார். மேலும், பல்வேறு முக்கியத்துவம் மிக்க கனிம வளங்கள் நமீபியா இருப்பதால், அது தொடர்பான விஷயங்களும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.