
ரஷ்யா வெளிப்படுத்திய ஆர்வத்தைத் தொடர்ந்து, நீண்டகாலமாக செயலற்ற நிலையில் உள்ள ரஷ்யா-இந்தியா-சீனா (RIC) முத்தரப்பு கூட்டமைப்பை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான எந்தவொரு முடிவும் `அனைவருக்கும் ஏற்ற வகையில்’ எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த முத்தரப்பு கூட்டமைப்பு ஒரு தளமாக இயங்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விவரித்தார்.
`ஆர்.ஐ.சி. என்பது ஆலோசனைகள் மேற்கொள்ளும் வடிவத்தினாலான ஒரு அமைப்பாகும், இது மூன்று நாடுகளும் தங்களுக்கு ஆர்வமுள்ள உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து விவாதிக்க ஒன்றிணையும் ஒரு வழிமுறையாகும்’ என்று விளக்கிய ஜெய்ஸ்வால், `மூன்று நாடுகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை பொறுத்து திட்டமிடல் இருக்கும்’ என்றார்.
இந்த முத்தரப்பு கூட்டமைப்பின் வடிவமைப்பு குறித்து எந்தவொரு உடன்பாடும் இதுவரை எட்டப்படவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த முத்தரப்பு கூட்டமைப்பை மீண்டும் தொடங்க அண்மையில் வலியுறுத்தினார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசிய லாவ்ரோவ், ` (முன்னாள் ரஷ்ய பிரதமர்) யெவ்ஜெனி ப்ரிமகோவின் முன்முயற்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ரஷ்யா, இந்தியா, சீனா அடங்கிய முத்தரப்பு கூட்டமைப்பின் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்குவதில் எங்களின் உண்மையான ஆர்வத்தை உறுதிப்படுத்த விரும்புகிறேன்’ என்றார்.
கடந்த 1990-களின் பிற்பகுதியில் முதல்முறையாக இந்த முத்தரப்பு கூட்டமைப்பு உருவானது. பிரிக்ஸ், சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றின் தோற்றத்திற்குப் பிறகு இந்த அமைப்பின் முக்கியத்துவம் குறைந்துபோனது.