`2029-ல் கூட இண்டியா கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயாராக வேண்டும்’ என்று விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா. மேலும் 2029 மக்களவைத் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் குடிநீர் வழங்கல் திட்டமான நியாய சேதுவையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும் தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விழாவில் உரையாற்றினார்.
`இண்டியா கூட்டணி 2029-ல் கூட ஏதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயாராக வேண்டும். எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், மீண்டும் 2029-ல் தேசிய ஜனநாயக கூட்டணி வரும். பிரதமர் மோடி வருவார். அவர்களுக்குத் தெரியாது கடந்த மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற இடங்களை விட இந்தத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பெற்றுள்ளது’ என்று விழாவில் பேசினார் அமித் ஷா.
எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்த அமித் ஷா, இண்டியா கூட்டணி நிலையற்ற சூழலை உருவாக்க முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சிகள் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
`நிலையற்ற சூழலை உருவாக்க நினைப்பவர்கள் இந்த அரசு கடைசி வரை நிலைக்காது என்று கூறிவருகிறார்கள். இந்த அரசின் பதவிக்காலத்தை நிறைவு செய்வது மட்டுமல்லாமல் அடுத்த அரசாங்கமும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசாங்கமாக இருக்கும். எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமரத் தயாராக இருங்கள். எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை ஒழுங்காகக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று பேசினார் அமித் ஷா.