
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தாவி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு குறித்து நேற்று (ஆக. 24) பாகிஸ்தான் அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
`மனிதாபிமான அடிப்படையில் வெள்ளப் பெருக்கு தொடர்பான தரவுகளைப் பகிர்ந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, எனவே அந்தத் தரவுகள் வெளியுறவு அமைச்சகம் மூலம் பகிரப்பட்டது,’ என்று நம்பத்தகுந்த வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு தொடர்பான தரவுகளை மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நேற்று (ஆக. 24) வெளியுறவு அமைச்சகத்துடன் பகிர்ந்து கொண்டது. அது அங்கிருந்து இஸ்லாமாபாத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், வெள்ளப் பெருக்குகள் தொடர்புடைய தரவுகள் சிந்து நதி ஆணையர்கள் வழியாகப் பகிரப்பட்டன. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, செப்டம்பர் 19, 1960 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) கையெழுத்தானது.
சிந்து நதி நீர் ஒப்பந்த விதிகளின்படி, `கிழக்கு நதிகளின்’ - சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி - ஆகியவற்றின் நீர் இந்தியாவின் `கட்டுப்பாடற்ற பயன்பாட்டிற்கு’ கிடைக்கும். இருப்பினும், பாகிஸ்தானுக்கான `மேற்கு நதிகளான’ - சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றில் இருந்தும் இந்தியா தண்ணீரைப் பெறும்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்தது.