
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் தொலைபேசி வாயிலாக உரையாடியதாக செய்தி வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படைகளால் கடந்த மே 7-ல் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. 4 நாள்கள் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் மேற்கொண்ட தாக்குதல்கள், அமெரிக்காவின் தலையீட்டினால் கடந்த சனிக்கிழமை (மே 10) முடிவுக்கு வந்தது.
அன்று மாலை 6 மணிக்கு மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, போர் நிறுத்தம் குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிட்டார். மேலும், மே 12-ல் நண்பகல் 12 மணியளவில் இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.
ஆனால் திட்டமிட்டபடி இன்று நண்பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. மிகவும் தாமதமாக, மாலை 6 மணியளவில் இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
எனினும், போர் நிறுத்த அறிவிப்பையும் மீறி அன்று (மே 10) இரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு, இந்த தொலைபேசி உரையாடலின்போது இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த மோதல் மற்றும் போர் நிறுத்தம் தொடர்பாக அவர் பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.