யார் கூறியதையும் இந்தியா கேட்கவில்லை: ராகுல் காந்தி விமர்சனத்திற்கு சசி தரூர் பதிலடி!

பாகிஸ்தான் நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராகவே இருக்கிறோம் என்று கூறினோம்.
யார் கூறியதையும் இந்தியா கேட்கவில்லை: ராகுல் காந்தி விமர்சனத்திற்கு சசி தரூர் பதிலடி!
ANI
1 min read

பிரதமர் மோடியை முன்வைத்து `நரேந்திரர் சரணடைந்தார்’ என்று ராகுல் காந்தி மேற்கொண்ட விமர்சித்ததற்கு, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அனைத்துக் கட்சி குழுவிற்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அமெரிக்காவில் பதிலளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பைத் தொடர்ந்தே பிரதமர் மோடி சரணடைந்தார் என்று ராகுல் காந்தி மேற்கொண்ட விமர்சனம் குறித்து தரூரிடம் கேட்டபோது, `இந்தியா-பாகிஸ்தான் மோதலில் எந்த நேரத்திலும் மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லை’ என்று தரூர் தெளிவுபடுத்தினார்.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது,

` (தாக்குதலை) இந்தியா நிறுத்த யாரும் வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. யாரும் எங்களை நிறுத்தச் சொல்லத் தேவையும் இல்லை, ஏனென்றால் பாகிஸ்தான் நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராகவே இருக்கிறோம் என்று கூறினோம்.

எனவே, அவர்கள் பாகிஸ்தானியர்களிடம், நீங்கள் நிறுத்துங்கள், ஏனென்றால் இந்தியர்கள் நிறுத்தத் தயாராக இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். அவர்கள் செய்ததும் அதுதான். அது அவர்களின் பங்களிப்பில் நடைபெற்ற அற்புதமான செயல்’ என்றார்.

டொனால்ட் டிரம்பின் அழைப்பைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திவிட்டு பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்ததாகக் கூறி, கடந்த ஜூன் 3 அன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனத்தை முன்வைத்தார்.

மேலும், `அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபோதிலும் 1971-ம் ஆண்டில் (வங்கதேச விடுதலை போர்) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒருபோதும் பின்வாங்கவில்லை’ என்று நரேந்திர மோடியை அவர் இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in