யாகி புயல் ஏற்படுத்திய பாதிப்பை அடுத்து தென்கிழக்காசிய நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குகிறது இந்தியா. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்துள்ளது இந்தியக் கடற்படை
தென் சீனக் கடலில் முதலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி பின் புயலாக உருவெடுத்த யாகி, கடந்த வாரத்தின் துவக்கத்தில் கரையைக் கடந்தது. ஃபிலிப்பைன்ஸ் அருகே உருவான இந்தப் புயல், தென் சீனக் கடலில் மேற்கு நோக்கி நகர்ந்து வியட்நாம், லாவோஸ், மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
புயல் கரையைக் கடந்து ஒரு வார காலம் ஆகியும் வடக்கு வியட்நாம் மற்றும் வடக்கு தாய்லாந்தில் உள்ள பல பகுதிகள் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. மியான்மர் நாட்டில் மட்டும் இந்தப் புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சுமார் 113 மக்கள் மரணமடைந்துள்ளனர், மேலும் 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த பாதிப்புகளின் அடிப்படையில் மியான்மர், வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரேஷன் பொருட்கள், பாத்திரங்கள், துணிகள், மருந்துகள், கொசு வலைகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் என நேற்று (செப்.15) அறிவித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
இதை அடுத்து இந்தியா சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தும், இந்திய கடற்படையின் கிழக்கு மண்டலத்தின் தலைமையகமான விசாகப்பட்டினத்தில் இருந்து, இந்திய கடற்படைக் கப்பல்கள் வழியாக அந்நாடுகளுக்கு அனுப்பப்பட இருக்கின்றன.