
2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3% என்ற அளவில் இருக்கும் என்று இந்தியாவின் தேசியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட 7% வளர்ச்சியைவிட இந்த மதிப்பீடு அதிகமானதாகும். சென்ற ஆண்டு (2022-23)-ல் வளர்ச்சி விகிதம் 7.2% என்று இருந்தது.
சர்வதேச ரேட்டிங் நிறுவனமான எஸ்&பி (S&P), இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.4% ஆக இருக்கும் என்று குறிப்பிட்டது. ஆனாலும் இந்த அளவிலுமேகூட, இந்தியாதான் உலகிலேயே மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று எஸ்&பி தெரிவித்துள்ளது. எஸ்&பி மதிப்பீட்டின்படி, இந்தியாவின் வளர்ச்சிவிகிதம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே போய் 2026-27-ல் 7%-ஐத் தாண்டும்.
இதே விகிதத்தில் வளர்ந்துகொண்டிருந்தால், இந்தியா 2030-ல் உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று எஸ்&பி தெரிவித்திருந்தது. ஆனால் இந்தியாவின் வளர்ச்சி எஸ்&பி-யின் மதிப்பீட்டைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்பதனால் 2029-லேயே இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன.