
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம், பல நதிகளில் உபரி நீர் திறந்துவிடப்படுவது குறித்து பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக இன்று (ஆக. 27) மீண்டும் தகவல் தெரிவித்துள்ளது.
ராவி, செனாப் மற்றும் சட்லெஜ் நதிகள் வழியாக குறிப்பிடத்தக்க அளவில் வெள்ளம் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வட இந்தியா முழுவதும் தொடர் கனமழை பெய்து வருவதால், முக்கிய அணைகளின் மதகுகளைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு `அதிகப்படியான வாய்ப்பு’ இருப்பதாக பாகிஸ்தானுக்குப் வெள்ள அபாய எச்சரிக்கைகளை இந்தியா விடுத்து வருகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் நீர்நிலை தொடர்பான தரவுகளை பகிரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போதிலும், மனிதாபிமான அடிப்படையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன.
முதல் எச்சரிக்கை கடந்த ஆகஸ்ட் 25 அன்று விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்றும் (ஆகஸ்ட் 26), இன்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
`தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக நேற்று (ஆக. 26) மற்றொரு எச்சரிக்கையையும், இன்று (ஆக. 27) ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டோம். இந்தியப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சில அணைகளின் மதகுகள் திறக்கப்பட வேண்டியிருந்தன’ என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இமயமலையில் தோன்றி ஜம்மு வழியாகப் பாய்ந்து பாகிஸ்தானில் வைத்து செனாப் நதியில் இணைகிறது தாவி நதி. தொடர் கனமழையால் இதில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பஞ்சாபில் சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் மற்றும் பல பருவகால ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் நீர்நிலை தரவு பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.