
சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளிலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும், விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக 52 ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் பணிகளில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ. 26,968 கோடி மதிப்பிலான இந்த திட்டம், நிகழ்நேர கண்காணிப்பில் ஈடுபடுவதையும், எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவின் ராணுவ விண்வெளித் திறன்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இத்தகைய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (SBS) திட்டத்தின் 3-ம் கட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 21 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. மீதமுள்ள 31 செயற்கைக்கோள்களை மூன்று தனியார் நிறுவனங்கள் உருவாக்கி, அவற்றை வானில் நிலைநிறுத்தும் பணிகளில் ஈடுபடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பின் முதல் செயற்கைக்கோளை ஏப்ரல் 2026-ல் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. 2029-ம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து செயற்கைக்கோள்களையும் முழுமையாகப் பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எதிரி நாட்டுப் பகுதிக்குள் நடமாட்டங்களை கண்காணிப்பதில் இந்தியாவின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு உதவிடும் வகையில், உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இந்த செயற்கைகோள் தொகுப்பு வழங்கும்.
உள்நாட்டு மற்றும் வணிக செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பின் மதிப்பை, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அண்மையில் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் எடுத்துக்காட்டியது.