
இன்று (ஜூன் 24) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஐநா சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதில், முன்னேற்றம் அடைந்ததற்காக தரவரிசைப்படுத்தப்பட்ட 167 நாடுகளின் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இந்தியா முதல்முறையாக இடம்பிடித்துள்ளது.
கல்வி, சுகாதாரம், வறுமை நீக்கம், பொருளாதார வளர்ச்சி என உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய 17 அம்சங்களின் கீழ் ஐநா சபை பட்டியலிட்டுள்ள 169 இலக்குகள், `நிலையான வளர்ச்சி இலக்குகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த இலக்குகளை 2030-க்குள் அடைய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவற்றை அடைவதற்காக உலக நாடுகள் மேற்கொள்ளும் முன்னேற்றங்களை முன்வைத்து ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது
அதன்படி, தற்போது வெளியிடப்பட்டுள்ள நடப்பாண்டிற்கான 193 நாடுகளைக் கொண்ட தரவரிசைப் பட்டியலில் 67 புள்ளிகளுடன் இந்தியா 99-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2017 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த தரவரிசைப் பட்டியலில் முதல்முறையாக 100 இடங்களுக்குள் இந்தியா இடம்பிடித்துள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில் கடந்தாண்டு 109-வது இடத்தைப் பிடித்த இந்தியா, 2023-ல் 112-வது இடத்தையும், 2022-ல் 121-வது இடத்தையும், 2021-ல் 120-வது இடத்தையும் பிடித்திருந்தது.
நடப்பாண்டு பட்டியலில், ஃபின்லாந்து முதலிடத்தையும், ஸ்வீடன் இரண்டாம் இடத்தையும், டென்மார்க் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. முதல் 18 இடங்களை ஐரோப்பிய நாடுகளும், ஆசிய நாடான ஜப்பான் 19-வது இடத்தையும் பிடித்துள்ளன.
உலக வல்லரசான அமெரிக்கா 44-வது இடத்திலும், இந்தியாவின் பிரதான போட்டி நாடான சீனா 49-வது இடத்திலும் உள்ளன. அதேநேரம், இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான் 74-வது இடத்தையும், நேபாளம் 85-வது இடத்தையும் பிடித்துள்ளன.
குறிப்பாக, 2015-ல் ஐநா உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்ட இந்த 169 இலக்குகளில் 17% மட்டுமே 2030-ம் ஆண்டுக்குள் எட்டப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.