
நிச்சயமற்ற சூழல்களால் பல பிரச்னைகளை உலகம் சந்தித்து வரும் வேளையில், நம்பிக்கையின் ஒளியாக இந்தியா மிளிர்வதாக என்.டி.டி.வி.யின் உலக மாநாட்டில் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இன்று (அக்.21) காலை தலைநகர் தில்லியில் `இந்திய நூற்றாண்டு’ என்ற தலைப்பில் நடைபெற்ற என்.டி.டி.வி. உலக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. மாநாட்டில் அவர் பேசியவை பின்வருமாறு:
`கடந்த 4, 5 வருடங்களாக எதிர்காலம் பற்றிய கவலை குறித்து பொதுவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கோவிட் பெருந்தொற்று சமயத்தில் அதை எவ்வாறு கையாள்வது என்ற கவலை ஏற்பட்டது. காலநிலை மாற்றம், வேலைவாய்ப்பின்மை, போர்கள், உலகளாவிய விநியோக சங்கிலிகள் போன்றவை குறித்த கவலைகள் நம்மை ஆட்கொண்டன.
சர்வதேச மாநாடுகளிலும், பயிலரங்குகளிலும் அழுத்தம் மற்றும் பதற்றம் முக்கிய பேசுபொருளானது. இத்தனை விவாதங்கள், அழுத்தங்கள் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில் இன்று நாம் இந்திய நூற்றாண்டு குறித்து விவாதிக்கிறோம். நிச்சயமற்ற சூழல் நிலவும் இந்த நேரத்தில் உலகத்தின் நம்பிக்கையின் ஒளியாக இந்தியா மிளிர்கிறது.
உலக சூழல்கள் இந்தியாவையும் பாதிக்கின்றன. அதனால் நமக்கும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால் இந்த பதற்றமான சூழ்நிலையிலும் நேர்மறையான எண்ணம் இந்தியாவை வளர்ச்சியடைய வைக்கிறது. பல துறைகளிலும் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது’ என்றார்.
இந்த நிகழ்வில் உலக செய்திகளுக்கான என்.டி.டி.வி. வேர்லட் என்கிற புதிய சேனலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.