
2026-2028 காலகட்டத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 6 முக்கிய அமைப்புகளில், பொருளாதார சமூக கவுன்சிலும் ஒன்றாகும். நிலையான வளர்ச்சியின் மூன்று பரிமாணங்களான பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களில், ஐநா சபைக்கு கொள்கைகளைப் பரிந்துரைப்பதில் இந்த கவுன்சிலின் பணி முக்கியமானதாகும்.
பொருளாதார சமூக கவுன்சிலின் உறுப்பினர்களாக ஒரே நேரத்தில் மொத்தம் 54 நாடுகள் செயல்படும். இதில், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பதவிக்காலம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை முடிவுக்கு வரும். அந்த வகையில் நடப்பாண்டின் இறுதியில் காலியாகவுள்ள 18 புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று (ஜூன் 5) நடைபெற்றது.
இந்த காலி இடங்களுக்கு சீனா, இந்தியா, லெபனான், ரஷ்யா, துர்மெனிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக தேர்வாகின. இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`2026-2028-ம் ஆண்டுக்கான பொருளாதார சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எங்கள் மீது மிகுந்த ஆதரவையும், நம்பிக்கையையும் அளித்ததற்காக ஐநா உறுப்பு நாடுகளுக்கு நன்றி.
ஐநாவுக்கான இந்திய தூதரக அதிகாரிகளின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இந்தியா உறுதியாக உள்ளது, மேலும் பொருளாதார சமூக கவுன்சிலை வலுப்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுவோம்’ என்றார்.