பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என்ற அந்நாட்டு ராணுவத்தின் குற்றச்சாட்டுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாண வடக்கு வாஸிரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ கான்வாய் மீது நேற்று தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. வெடிபொருள் நிரப்பிய காரை கான்வாய் மீது மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டார்கள். 10 பேர் காயமடைந்தார்கள். ராணுவ வீரர்கள் தவிர பொதுமக்கள் 19 பேரும் இதில் காயமடைந்தார்கள்.
பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் பிரிவான ஹஃபிஸ் குல் பஹதுர் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர் இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளார் என நேற்று தகவல்கள் வெளியாகின.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியா காரணம் என பாகிஸ்தான் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. டான் செய்தியின்படி, பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவின் அறிக்கையில், தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதி இந்தியாவால் ஊக்கப்படுத்தப்பட்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. "வாஸிரிஸ்தானில் ஜூன் 28 அன்று நிகழ்ந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவைக் காரணம் கூறியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை கண்டனத்துடன் நிராகரிக்கிறோம்" என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.