
கொரோனா நோய்த் தொற்றால், நாடு முழுவதும் இன்றைய (ஜூன் 4) நிலவரப்படி சுமார் 4,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த மே மாத இறுதியில் தொடங்கி, இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 4) காலை 8 மணி அளவில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டில் இதுவரை 4,302 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,281 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக கேரளத்தில் 1,373 பேரும், இதற்கு அடுத்த இடத்தில் மஹாராஷ்டிரத்தில் 510 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் 44 பேர் நோய்த் தொற்றால் மரணமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிர மாநிலத்தில் 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கேரளத்தில் 9 நபர்களும், தில்லி 5 நபர்களும், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் தலா 4 நபர்களும், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 2 நபர்களும் கொரானா தொற்று பாதிப்பார் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் சிலருக்கு ஏற்கனவே உடல்நலக்கோளாறுகள் இருந்ததாக சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதன்படி, மரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நீரிழிவு மற்றும் பார்கின்சன் நோய் பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.