Breaking News

வங்கதேசத்தில் ஹிந்து சிறுபான்மையினத் தலைவர் கொலை: இந்தியா கண்டனம்

"இத்தகையக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனை எதுவும் இல்லாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள்."
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் (கோப்புப்படம்)
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் (கோப்புப்படம்)ANI
1 min read

வங்கதேசத்தில் ஹிந்து சிறுபான்மையினத் தலைவர் பாவேஷ் சந்திரா ராய் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் நன்கு அறியப்பட்ட ஹிந்து சிறுபான்மையினத் தலைவர் பாவேஷ் சந்திர ராய். பாவேஷுக்கு வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு அலைபேசி வாயிலாக அழைப்பு வந்துள்ளது. இதன்மூலம், அவர் வீட்டிலிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவருடைய மனைவி தெரிவிக்கிறார். இதிலிருந்து 30 நிமிடங்களுக்குப் பிறகு 4 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது.

வங்கதேசத்தில் வெளியான செய்தியின்படி, அவர் ஒரு கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்கள். பிறகு, சுயநினைவு இல்லாத நிலையில், பாவேஷ் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளார். பலத்த காயமடைந்த இவரைக் குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால், இவருடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. வங்கதேசத்தில் ஏற்கெனவே மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு வங்கதேசத்தில் கேள்விக்குள்ளாகி இருக்கும் இருக்கிறது. இந்தக் கொலை இக்குற்றச்சாட்டை மேலும் வலுவடையச் செய்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"வங்கதேசத்தில் ஹிந்து சிறுபான்மையினத் தலைவர் பாவேஷ் சந்திர ராய் கடத்திக் கொல்லப்பட்டுள்ள செய்தியை வேதனையுடன் அறிந்தோம். இடைக்கால அரசின் கீழ் ஹிந்து சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தல் என்பது ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றுகிறது. இதன் தொடர்ச்சியே இந்தக் கொலை. இதற்கு முன்பு இத்தகையக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனை எதுவும் இல்லாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள்.

இந்தச் சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். ஹிந்துக்கள் உள்பட அனைத்துச் சிறுபான்மையினரையும் எவ்வித வேறுபாடின்றி, எந்தக் காரணங்களையும் கூறாமல் பாதுகாக்க வேண்டும் என்கிற பொறுப்புக்கேற்ப செயல்பட வேண்டும் என்பதை இடைக்கால அரசுக்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in