
சீனாவில் உள்ள ஹிந்துக்களின் புனித தலமான கைலாய மலைக்கு, 6 வருடங்கள் கழித்து முதல்கட்டமாக 50 இந்தியர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது உள்பட அரசுரீதியான உறவுகளை இயல்பாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடைசியாக கடந்த 2020-ல், லடாக் யூனியன் பிரதேசத்தின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளன இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச எல்லைப்பகுதியில் வைத்து, இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்தாண்டு நவம்பரில் இரு நாடுகளுக்கும் இடையே அரசுரீதியிலான உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் இரு தரப்பு உயரதிகாரிகளுக்கும் ஈடுபட்டனர். அப்போது நிறுத்தி வைக்கப்பட்ட கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க அனுமதிக்கோரி இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜனவரியிலும், ஏப்ரலிலும் சீன தரப்புடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகே, நடப்பாண்டில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்படும் என்று ஏப்ரல் 26 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
யாத்திரை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து கிடைக்கப்பெற்ற 5,500 விண்ணப்ப படிவங்களில் இருந்து 750 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் முதற்கட்டமாக 50 இந்தியர்கள் அடங்கிய முதல் குழு நேற்று பயணத்தைத் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக 5 குழுக்கள் உத்தரகண்டின் லிபு லேக் வழியாகவும், 10 குழுக்கள் சிக்கிமின் நாதுலா வழியாகவும் பயணம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும், சீன வெளியுறவு இணையமைச்சர் சன் வெய்டோங்கும் தில்லியில் நேற்று (ஜூன் 13) பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில், இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்தும், விசா நடைமுறைகள் குறித்தும், இரு நாடுகளிலும் பாயும் நதிகள் தொடர்பான தரவுகளை பகிர்வது குறித்தும் பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.