
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக தலைநகர் தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் நேற்று (ஆக. 11) நடத்திய பேரணியைத் தொடர்ந்து, பிஹாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு ஆகிய விவகாரங்களை முன்வைத்து இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (ஆக. 12) தங்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்பட பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் `மிண்டா தேவி’ என்பவரின் புகைப்படம் இடம்பெற்றிருந்த டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர். இந்த டி-சர்ட்களின் பின்புறத்தில் `124 நாட் அவுட்’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.
வாக்கு திருட்டு விவகாரத்தை முன்வைத்து கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் காண்பிக்கப்பட்ட விளக்கக்காட்சியில் இடம்பெற்ற வாக்காளர்களில் மிண்டா தேவியும் ஒருவர்.
`124 வயதான மிண்டா தேவி’ அண்மையில் வெளியிடப்பட்ட பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்ட புதிய வாக்காளர் என்று ராகுல் காந்தி கூறினார். பிஹார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற மிண்டா தேவியின் வயது 124 என்றும், உலகளவில் சரிபார்க்கப்பட்ட மிகவும் வயதான நபரைவிட இவருக்கு ஒன்பது வயது அதிகம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த தனித்துவமான போராட்டம் குறித்து ஏஎன்ஐ ஊடகத்திடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், `இந்திய தேர்தல் ஆணையத்தின் தோல்வியின் அளவைப் புரிந்துகொள்ள முடியும், ராஜீவ் குமார், கியானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒரு துறையாக மாறிவிட்டது.
அவர்கள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டனர். உதாரணமாக, மிண்டா தேவி முதல்முறையாக வாக்களிப்பவர், ஆனால் 124 வயதுடையவர். இந்த விஷயம் குறித்து விவாதம் மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம்’ என்றார்.
மேலும், பிஹாரில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் போலி பெயர்களைக் கொண்ட போலி வாக்காளர் பட்டியல் என்று அவர் குற்றம்சாட்டினார். `எதிர்ப்பின் அடையாளமாகவும், அம்பலப்படுத்தும் விதமாகவும் நாங்கள் இந்த டி-ஷர்ட்டை அணிந்திருப்பதை விரும்புகிறோம்,’ என்றார்.