13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10-ல் வெற்றி பெற்ற இண்டியா கூட்டணி

மத்திய பிரதேசத்தின் அமரவாரா தொகுதி வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் பாஜக வேட்பாளருக்கும், காங்கிரஸ் வேட்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது
13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10-ல் வெற்றி பெற்ற இண்டியா கூட்டணி
ANI
1 min read

கடந்த ஜூலை 10-ல் நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை என்று நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி 13 தொகுதிகளில், 10 தொகுதிகளை இண்டியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. மற்ற 3 தொகுதிகளில், 2-ல் பாஜகவும், 1 தொகுதியில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். பீகாரின் ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஷங்கர் சிங், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டலை 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் ரனாகத் தக்‌ஷின், பக்டா, மணிக்தாலா, ராய்கஞ்ச் என நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த நான்கு தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார். இந்த நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர், டெஹ்ரா, நலாகர் சட்டப்பேரவைத் தொகுதகளின் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தனர். இந்த மூவரும் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டனர்.

இதில் ஹமிர்பூர் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மற்ற இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் முதல்வர் சுக்வீந்தர் சிங்கின் மனைவி கம்லேஷ் தாக்கூர் டெஹ்ரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் அமரவாரா தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் பாஜக வேட்பாளருக்கும், காங்கிரஸ் வேட்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் இறுதியில் பாஜகவின் கமலேஷ் பிரதாப் ஷா, காங்கிரஸ் வேட்பாளரை 3 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லக்காபட் சிங் புட்டோலாவும், மங்களூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு வேட்பாளர் காஸி முகமது நிஜாமுதீனும் வெற்றி பெற்றனர். உத்தரகண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தின் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மொஹிந்தர் பகத், பாஜக வேட்பாளரை 37,325 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக சுரீந்தர் கௌர் நிறுத்தப்பட்டார். வாக்கு எண்ணிக்கையில் சுரீந்தர் கௌருக்கு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in