இண்டியா கூட்டணி 295 இடங்களில் வெல்லும்: மல்லிகார்ஜுன கார்கே

"நாங்கள் 295-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். இண்டியா கூட்டணி வெற்றி பெறுகிறது. பிரதமர் யார் என்பதை நாங்கள் பின்னர் முடிவு செய்வோம்." - தேஜஸ்வி யாதவ்.
இண்டியா கூட்டணி 295 இடங்களில் வெல்லும்: மல்லிகார்ஜுன கார்கே
ANI

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி குறைந்தபட்சம் 295 இடங்கள் வரை வெற்றி பெறும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் வரும் செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ள நிலையில், இண்டியா கூட்டணித் தலைவர்கள் தில்லியிலுள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று கூடினார்கள். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. திமுக சார்பில் டி.ஆர். பாலு இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இண்டியா கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு தொடர்புடைய தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்தன.

இந்த ஆலோசனைக்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கே மற்றும் இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

"இண்டியா கூட்டணி குறைந்தபட்சம் 295 இடங்களில் வெற்றி பெறும். நாங்கள் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம். ஒற்றுமையுடன்தான் இருப்போம். எங்களைப் பிரிக்க முயற்சிக்க வேண்டாம்" என்றார் கார்கே.

பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "நாங்கள் 295-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். இண்டியா கூட்டணி வெற்றி பெறுகிறது. பிரதமர் யார் என்பதை நாங்கள் பின்னர் முடிவு செய்வோம். 400 இடங்களில் வெற்றி என்ற பாஜகவின் படம் முதல்கட்ட வாக்குப்பதிவிலேயே தோல்வியடைந்துவிட்டது" என்றார் அவர்.

சிவசேனை தலைவர் அனில் தேசாய் (உத்தவ் தாக்கரே தரப்பு) கூறுகையில், "மஹாராஷ்டிரத்தில் நாங்கள் 30 முதல் 35 இடங்களில் வெற்றி பெறுவோம்" என்றார்.

சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தில் அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்திக்கும். பெரும்பாலான இடங்களில் இண்டியா கூட்டணியே வெற்றி பெறும். அங்கு வேலைவாய்ப்பின்மை, விலையேற்றம், ஜிஎஸ்டி, சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை என நிறைய பூகம்பங்கள் உள்ளன. அனைத்து பூகம்பங்களும் முடிவுக்கு வரவுள்ளன" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறுகையில், "வாக்கு எண்ணிக்கையின்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். வாக்கு எண்ணிக்கையின்போது ஏஜென்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை அவர்களுக்கு உண்டாக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் தேர்தல் ஆணையத்தைச் சந்திக்கவுள்ளோம். தேர்தல் ஆணையம் நாளை நேரம் ஒதுக்கியவுடன், எங்களுடையத் தலைவர்கள் சென்று சந்திப்போம். தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. ஒருதலைப்பட்சமாகவே முடிவுகள் வருகின்றன. நாங்கள் 295-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம்" என்றார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "இண்டியா கூட்டணி 295-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். பாஜக ஏறத்தாழ 220 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெறும். இண்டியா கூட்டணி வலிமையான, நிலையான ஆட்சியை தாமாக அமைக்கும். பிரதமர் யார் என்பதை ஜூன் 4-ல் முடிவு செய்வோம்" என்றார் கெஜ்ரிவால்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர அவாத், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி தலைவர்கள் ராகவ் சத்தா, சஞ்சய் சிங், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், சஞ்சய் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரென், கல்பனா சோரென், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சார்பில் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, சிவசேனை சார்பில் அனில் தேசாய், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in