கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

ஜூன் 1-ல் கூடுகிறது இண்டியா கூட்டணி!

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்.

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள ஜூன் 1-ல் சந்திக்க இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் செயல்பாடு குறித்து விவாதிக்கவும், தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து வியூகம் வகுக்கவும் இண்டியா கூட்டணி கூடுகிறது.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடைசிக் கட்ட வாக்குப்பதிவு இருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது:

"ஜூன் 1-ல் இண்டியா கூட்டணி கூடுகிறது. அதே நாளில் மேற்கு வங்கத்தில் 10 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதால் என்னால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்பதைத் தெரிவித்துவிட்டேன். பஞ்சாப், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்திலும் ஜூன் 1-ல் தேர்தல் நடைபெறுகிறது. ஒருபுறம் புயல் பாதிப்பும், மறுபுறம் தேர்தலும் இருப்பதால் நான் அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது. புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவதுதான் தற்போது எனக்கு முன்னுரிமை" என்றார் அவர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in