
பெங்களூருவில் நடைபெற்ற பாலியல் தொல்லை விவகாரத்தை முன்வைத்து, கர்நாடக உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வரா தெரிவித்த கருத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஏபரல் 4 அன்று, பெங்களூரு நகரத்தின் பிடிஎம் லேஅவுட் பகுதியில் வைத்து, இரு பெண்களை தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், அவர்களில் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளிக்க முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு மாநகர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் இதுவரை புகார் அளிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் பரமேஸ்வரா கூறியதாவது,
`ரோந்துப் பணிகள் மூலம் அனைத்துப் பகுதிகளையும் கண்காணித்து, ஒவ்வொரு நாளும் கவனத்துடன் இருக்குமாறு காவல் ஆணையரிடம் நான் கூறி வருகிறேன். இதை கிட்டத்தட்ட நான் எல்லா நாளும் கூறிவருகிறேன். சில சம்பவங்கள் இங்கும், அங்கும் நடைபெறும்போது நிச்சயமாக அவை மக்களின் கவனத்தை ஈர்க்கும்.
24 மணி நேரமும் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில சம்பவங்கள் இங்கும் அங்கும் நடைபெறும். இவ்வளவு பெரிய நகரத்தில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். சட்டப்படி தேவையான நடவடிக்கையை எடுப்போம். இன்று காலையும் காவல் ஆணையரிடம் பேசினேன்’ என்றார்.
அமைச்சர் பரமேஸ்வராவின் கருத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக எம்.எல்.ஏ.வும், முன்னாள் கர்நாடக துணை முதல்வருமான அஷ்வத் நாராயணா கூறியதாவது,
`இது கண்டனத்திற்குரிய நிகழ்வு. உள்துறை அமைச்சரின் பதில் அருவருப்பாகவும், மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இத்தகைய சம்பவங்கள் மற்றும் பேட்டிகளால் பொதுமக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். ஒரு உள்துறை அமைச்சராக அவர் எந்த அளவு உதவியற்ற நிலையில் உள்ளார் என்பதை அவரது பேட்டி காட்டுகிறது. ஒரு பொறுப்பான அறிக்கையை அவர் வெளியிடவேண்டும்’ என்றார்.