"இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை": மும்பையில் இணைந்த கைகள்!

"இந்தப் பயணம் தில்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப்பதில் நிறைவுற வேண்டும்."
"இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை": மும்பையில் இணைந்த கைகள்!
ANI

இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை "இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை" என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமைக்கான நடைப்பயணம் மும்பையில் இன்று நிறைவடைந்தது. இதையொட்டி மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், கூட்டணியிலுள்ள தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ், ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

"இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சகோதரர் ராகுல் காந்தி பயணித்திருக்கிறார். பாஜகவால் சீரழிக்கப்பட்ட நம் இந்தியாவை மீட்பதற்கான பயணம் இது. பாஜகவை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

இந்த நடைப்பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பாஜகவை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் தில்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப்பதில் நிறைவுற வேண்டும்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

"மின்னணு வாக்கு இயந்திரம் உங்களுடைய வாக்கைத் திருடிவிடும் என்பதால், அதை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும். வாக்களித்தவுடன், விவிபேட் மூலம் உங்களுடைய வாக்கை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இண்டியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் இந்த வாக்கு இயந்திரத்துக்கு முடிவு கட்டப்படும். அடுத்தது, தேர்தல் ஆணையம் தன்னாட்சியுடன் செயல்படும்.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

"இன்றைய நாளில் மிகவும் தேவையான குறிப்பிடத்தக்க ஒரு செய்தியைக் கொண்டு சேர்க்க ராகுல் காந்தி முயற்சித்திருக்கிறார். நாட்டின் அரசியலமைப்பையும் சகோதரத்துவத்தையும் பாதுகாக்க, வெறுப்பை வீழ்த்த ஒற்றுமைக்கான நீதிப் பயணத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

"இந்தியாவில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தொடர்புகொள்வதற்கான அமைப்புகள் எதுவும் நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை. பொதுமக்களைப் பாதிக்கக் கூடிய வேலைவாய்ப்பின்மை, வன்முறை, பணவீக்கம், விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட எதுவும் வெளியில் காட்டப்படுவதில்லை. நாட்டின் கவனத்தை ஈர்க்க 4 ஆயிரம் கி.மீ. நடக்க வேண்டியிருந்தது" என்றார்.

இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தியை "இந்தியாவின் எதிர்காலத்தின் நம்பிக்கை" என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in