
இந்தியாவின் தூய்மையான நகரமான இந்தூரில் வரும் 1 ஜனவரி முதல் பிச்சை கொடுக்க தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது வழக்கு தொடரப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.
தொடர்ச்சியாக கடந்த 7 வருடங்களாக இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து வருகிறது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரம். இந்நிலையில், வரும் ஜனவரி 1-ல் இருந்து இந்த நகரத்தில் பிச்சை கொடுக்கவும், குழந்தைகளிடம் இருந்து பொருட்களை வாங்கவும் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார் இந்தூர் மாவட்ட ஆட்சியர் அஷீஷ் சிங்.
இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பிச்சை வழங்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பரப்புரைகள் இம்மாதம் முன்னெடுக்கப்படும் எனவும் ஆட்சியர் அஷீஷ் சிங் அறிவித்துள்ளார்.
மேலும், வரும் ஜனவரி 1-ல் இருந்து பிச்சை கொடுப்பவர்கள் மற்றும் சாலைகளில் உள்ள குழந்தைகளிடமிருந்து பொருட்களை வாங்குபவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் அறிவித்துள்ளார் ஆஷிஷ் சிங். இது தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
பிச்சை எடுப்பதை ஒழிப்பது தொடர்பான திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ள 10 நகரங்களில் இந்தூரும் ஒன்றாகும்.