
கிராமப்புற மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துதல், நக்ஸல் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அவர்களது குடும்பங்கள் மூலம் சென்றடைந்து வன்முறை பாதையை கைவிட வலியுறுத்துதல் – ஆகிய பணிகளை, நக்ஸல் இயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் மாவட்டக் காவல்துறையின் புதிய முயற்சியான `பூனா மார்க்கம்’ மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
`புதிய பாதை’ என்று மொழிபெயர்க்கப்படும் இந்த திட்டம், மார்ச் 2026-ல் நக்சஸ் இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கை அடைய மாநில காவல்துறை முன்னெடுத்துள்ள நக்சஸ் எதிர்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும்.
`நக்சல் சரணடைதல் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கான மறுவாழ்வு கொள்கையை (2025)’ சத்தீஸ்கர் மாநில அரசு அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு இந்த புதிய உத்தி குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
சரணடைந்த முன்னாள் நக்சல்கள், மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG) மற்றும் பஸ்தர் போராளிகள் ஆகிய பாதுகாப்பு படைகளின் பணியில் இணைந்துள்ளனர். தற்போது நக்சல் இயக்கத்தில் ஈடுபட்டு வருபவர்களின் குடும்பங்களை அவர்கள் சந்தித்து, `வன்முறை தவிர்த்து, பொது நீரோட்டத்துடன் இணைய’ வலியுறுத்துவதை நோக்கமாக இந்த திட்டம் கொண்டுள்ளது என்று காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`பூனா மார்க்கம் என்பது நக்சல்களை அணுகி அவர்கள் சரணடைய வழிவகை செய்து, சமூகத்தில் மீண்டும் அவர்கள் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு முயற்சியாகும்’ என்று பஸ்தர் சரக காவல்துறை ஐஜி பி. சுந்தர்ராஜ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
சரணடைந்த நக்சல்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது, சுயதொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது, உளவியல் ஆலோசனைகளை வழங்குவது போன்றவற்றையும் இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது.