பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500: மஹாராஷ்டிர பட்ஜெட்டில் அறிவிப்பு

வரி குறைப்பு அறிவிப்பின் மூலம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2, பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 பைசா குறைகிறது.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500: மஹாராஷ்டிர பட்ஜெட்டில் அறிவிப்பு
1 min read

மஹாராஷ்டிரத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும் என அந்த மாநில துணை முதல்வரும், நிதியமைச்சருமான அஜித் பவார் அறிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஜூலை 12-ல் நிறைவடைகிறது. இன்னும் நான்கு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இது தேர்தலுக்கு முந்தைய கடைசிக் கூட்டத்தொடர்.

மஹாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் நிதித் துறையை வகிக்கிறார். இவர் சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

21 வயது முதல் 60 வயது வரையிலான அனைத்துப் பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அஜித் பவார் அறிவித்துள்ளார்.

மும்பை பிராந்தியத்தில் டீசல் மீதான வரி 24 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைகிறது. பெட்ரோல் மீதான வரி 26 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதன்மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 பைசா குறைகிறது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தி மற்றும் சோயா பயிர்களுக்காக அனைத்து விவசாயிகளுக்கும் ஹெக்டருக்கு ரூ. 5,000 போனஸாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தி விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ. 5 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு இதுவரை ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இது ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in