சர்வதேச காண்டாமிருக தினத்தை ஒட்டி, இந்தியாவில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு தசாப்தங்களில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக அஸ்ஸாம் மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
உலகளவில் மொத்தம் 5 வகையான காண்டாமிருகங்கள் உள்ளன. இதில் இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருக இனம் மட்டுமே உள்ளது. இந்த ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இந்தியாவின் அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் என மூன்று மாநிலங்களில் மட்டுமே உள்ளன.
இந்தியாவில் உள்ள காண்டாமிருகங்களில் 80 சதவீதம் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளன. அதிலும் அஸ்ஸாமின் காஸிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் இந்தியாவின் 70 சதவீத கண்டாமிருங்கள் உள்ளன. நேற்று (செப்.22) உலகளவில் சர்வதேச காண்டாமிருக தினம் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக அஸ்ஸாம் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:
`கொம்புகளுக்காக இந்திய காண்டாமிருகங்கள் அதிகளவில் வேட்டையாடப்பட்டு வந்தன. அதிலும் சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பாரம்பரிய மருந்துகளில் உபயோகப்படுத்துவதற்காக காண்டாமிருகக் கொம்புகள் இந்தியாவில் இருந்து அதிகளவில் அந்நாடுகளுக்கு கடத்தப்பட்டு வந்தன.
இதைத் தொடர்ந்து காண்டாமிருகங்கள் வேட்டையாடுவதைத் தடுக்க அஸ்ஸாம் வனத்துறை மற்றும் உள்ளூர் மக்கள் சார்பில் இடைவிடாத வகையில் சீரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1980-களில் 1,500 ஆக இருந்த இந்தியாவின் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை, தற்போது 4,014 ஆக உயர்ந்துள்ளது.