
அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதவி நீக்க தீர்மானம், நாடாளுமன்ற நடைமுறை சார்ந்த தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தற்போது நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி யாதவ் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்து, அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி சமர்ப்பிக்கப்பட்ட இந்த தீர்மானம், தற்போது குடியரசுத் துணை தலைவர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, தீர்மானத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட 55 கையொப்பங்களின் விரிவான சரிபார்ப்பை மாநிலங்களவை செயலகம் தொடங்கியுள்ளது. அப்போது, ஒரு எம்.பி.யின் கையொப்பம் இரண்டு முறை இடம்பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அது தொடர்பான விசாரணையை செயலகம் தொடங்கியது.
எனினும், குறிப்பிட்ட ஆவணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கையொப்பமிடவில்லை என்று சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, தீர்மானத்தை கொண்டுவருவதற்கு முன்பு அனைத்து கையொப்பங்களும் சரிபார்க்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் 19-21 எம்.பி.க்களின் கையொப்பங்கள் இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அனைத்து கையொப்பங்களும் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் வரை, இந்த பதவி நீக்கத் தீர்மானத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மேலும், போலி கையொப்பங்கள் அல்லது தீர்மானத்தின் வடிவத்தில் உள்ள பிழைகள் போன்ற முரண்கள் இருந்தால், தொழில்நுட்ப காரணத்தின் அடிப்படையில் தீர்மானம் நிராகரிக்கப்படும்.
`பெரும்பான்மையினரின் நலனுக்கு ஏற்பவே சட்டம் செயல்படும். பெரும்பான்மை மக்களின் நலனுக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகை செய்யும் விஷயங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று கடந்தாண்டு நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்வில், பொது சிவில் சட்டம் தொடர்பாக நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியது சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி யாதவை பதவி நீக்கம் செய்யத் தீர்மானம் கொண்டுவர, கபில் சிபல் தலைமையிலான எம்.பி.க்கள் கடந்தாண்டு டிசம்பர் 13 அன்று மாநிலங்களவை செயலகத்தில் நோட்டீஸ் வழங்கினார்கள்.