
இடைவிடாது பெய்து வரும் தொடர் கனமழையால், மும்பை மாநகரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும், ராய்கட், ரத்னகிரி, சதாரா, கோலாப்பூர் மற்றும் புனே உள்ளிட்ட மகாராஷ்டிரத்தின் பல கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஆக. 18) விடுத்துள்ளது.
மும்பை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
மும்பையின் வணிக மாவட்டத்தை அதன் புறநகர்ப் பகுதிகளுடன் இணைக்கும் வில்லே பார்லேவில் உள்ள மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் அனைத்து பள்ளிகளுக்கும் மும்பை பெருநகர மாநகராட்சி விடுமுறை அறிவித்துள்ளது.
`ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் கனமழை தொடர்வதால், தண்ணீர் தேங்குதல் சம்பவங்கள் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன’ என்று பெருநகர மும்பை காவல்துறை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தேவையற்ற பயணங்களுக்கு எதிராக அவர் பொதுமக்களை எச்சரித்தார்.
`தயவுசெய்து அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும், உங்கள் பயணத்தை கவனமாகத் திட்டமிடவும், தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லவும். எங்கள் அதிகாரிகளும் ஊழியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர், உதவவும் தயாராகவுள்ளனர். ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தயவுசெய்து 100 / 112 / 103 ஆகிய எண்களுக்கு அழைக்கவும்,’ என்று பெருநகர மும்பை காவல்துறை ஆணையர் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 16 தொடங்கி மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது, சில பகுதிகளில் 200 மி.மீ.க்கும் அதிகமாக மழை பெய்துள்ளதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.