
கடந்த 2016-ல் இருந்து நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை 13 வகைமைகளின் கீழ் ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது மத்திய கல்வி அமைச்சகம்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 12) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள இந்த வருடத்துக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை ஐஐடியும், அண்ணா பல்கலைக்கழகமும் முதல் இடங்களைப் பிடித்துள்ளன.
ஒட்டுமொத்த சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது சென்னை ஐஐடி, இந்தப் பட்டியலில் பெங்களூர் ஐஐஎஸ்சி இரண்டாவது இடத்தையும், மும்பை ஐஐடி மூன்றாவது இடத்தையும், தில்லி ஐஐடி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது சென்னை ஐஐடி.
சிறந்த மாநில பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும், மூன்றாவது இடத்தை புனேவில் உள்ள சாவித்ரிபாய் ஃபுலே பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன.
சிறந்த கல்லூரிகள் பட்டியலில் தில்லியைச் சேர்ந்த ஹிந்து கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஏழாவது இடத்தையும், சென்னை லயோலா கல்லூரி எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.