நான் உள்துறை அமைச்சராக இருந்தால்..: ஆந்திர உள்துறை அமைச்சருக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை

"நிலைமை மாறாவிட்டால், எதிர்காலத்தில் நான் உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்க நேரிடும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்https://x.com/JanaSenaParty
1 min read

தான் உள்துறை அமைச்சராக இருந்தால், நிலைமை வேறாக இருக்கும் என ஆந்திர உள்துறை அமைச்சருக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காக்கிநாடா மாவட்டத்தில் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், குற்றவாளிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எச்சரிக்கை விடுத்தார்.

"உள்துறை அமைச்சர் பதவியை என்னால் கேட்க முடியாது என்று இல்லை. உள்துறை அமைச்சர் பொறுப்பில் நான் இருந்தால், நிலைமை வேறாக இருக்கும். உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்ததைப்போல குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

அனிதா அவர்களே (ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர்), நீங்கள்தான் உள்துறை அமைச்சர். நான் வெறும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் வன & சுற்றுச்சூழல் துறை அமைச்சர்தான். உள்துறை அமைச்சருக்கான பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும்.

உள்துறை அமைச்சர் பொறுப்பை நான் ஏற்றால், நிலைமை வேறாக இருக்கும். நிலைமை மாறாவிட்டால், எதிர்காலத்தில் நான் உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்க நேரிடும்" என்றார் பவன் கல்யாண்.

தொடர்ந்து குற்றவாளிகளுக்கு விடுத்த எச்சரிக்கையில், "உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நாங்கள் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். டிஜிபி சார் மற்றும் உளவுத் துறை அதிகாரிகளே, மக்கள் நம்மை விமர்சிக்கிறார்கள். பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து நாங்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். இருந்தபோதிலும் எதுவும் மாறவில்லை. பவன் கல்யாண் போன்ற தலைவர்களை உடனடியாகக் கைது செய்ய, அதிகாரிகள் தயாராக உள்ளார்கள். ஆனால், குற்றவாளிகளைக் கைது செய்ய அவர்கள் தயாராக இல்லை" என்றார் அவர்.

பவன் கல்யாணின் பேச்சு ஆந்திர அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in