
காங்கிரஸ் கட்சிக்கு நான் தேவைப்படவில்லை என்றால், எனது நேரத்தை செலவிட வேறு பணிகள் உள்ளன என்று கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது 4-வது முறையாக திருவனந்தபுரம் எம்.பி.யாகப் பதவி வகிக்கிறார். அண்மையில் கேரள மாநிலத்தின் ஆளும் சிபிஎம் அரசின் கொள்கை முடிவுகளைப் பாராட்டி பிரபல நாளிதழ் ஒன்றில் சசி தரூர் எழுதியது சர்ச்சையானது.
அதை சிபிஎம் வரவேற்ற நிலையில், கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் இதற்கான எதிர்வினையை ஆற்றினார்கள். இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையைப் பாராட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் தரூர்.
காங்கிரஸ் கட்சியில் ஓரம்கட்டப்படுவதால் இவ்வாறான கருத்துகளை அவர் தொடர்ச்சியாகக் கூறி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், சசிதரூர் பங்கேற்றுப் பேசிய `வர்த்தமனம்’ என்ற பெயரிலான பாட்கேஸ்ட் வரும் பிப்.26-ல் வெளியாகவுள்ளது.
இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. முன்பு கூறிய கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக அந்த பாட்கேஸ்டில் அவர் கூறியதாவது,
`கட்சிக்கு நான் தேவைப்பட்டால் கட்சிக்காக நான் இருப்பேன். கட்சிக்கு நான் தேவைப்படவில்லை என்றால், எனக்கு வேறு பணிகள் உள்ளன. நேரத்தை செலவிட எனக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. எனக்கு வாய்ப்புகள் உள்ளன. எனது புத்தகங்கள், சொற்பொழிவுகளுக்காக உலகம் முழுவதும் உள்ள அழைப்புகள் வருகின்றன’ என்றார்.
மேலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் கட்சிக்கான எதிர்காலம் குறித்தும், தொடர் தோல்விக்கான காரணிகள் குறித்தும் அந்த பாட்கேஸ்டில் பேசியுள்ளார் தரூர்.