எந்தப் பெண்ணுக்குக் கொடுமை நேர்ந்தாலும் காங்கிரஸ் துணை நிற்கும்: பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்வாதி மாலிவால் விவகாரம் குறித்து பேச மறுப்பு தெரிவித்தார்.
எந்தப் பெண்ணுக்குக் கொடுமை நேர்ந்தாலும் காங்கிரஸ் துணை நிற்கும்: பிரியங்கா காந்தி

எந்தவொரு பெண்ணுக்குக் கொடுமை நேர்ந்தாலும், காங்கிரஸ் அவருடன் துணை நிற்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் முதல்வரின் உதவியாளரால் ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பாஜகவினர் இந்த விவகாரத்தை வைத்து ஆம் ஆத்மியை விமர்சித்து வருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டிய அழுத்தம் காங்கிரஸுக்கும் நேர்ந்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார். அப்போது இதுதொடர்புடைய கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

"எந்தவொரு பெண்ணுக்கு எதிராகவும் கொடுமை நிகழ்ந்தால், நாங்கள் அவருடன் துணை நிற்போம். கட்சி வேறுபாடின்றி நான் எப்போதும் பெண்களுக்கு ஆதரவாக இருந்துள்ளேன். இரண்டாவது இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி ஆலோசனை நடத்தி முடிவெடுக்கும். அது அவர்களுடைய முடிவு" என்றார் பிரியங்கா காந்தி.

முன்னதாக, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா கூறுகையில், "மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் விவகாரத்தைப் பொறுத்தவரை, முதல்வர் இல்லத்தில் வைத்து விரும்பத்தகாத சம்பவம் அவருக்கு நடந்திருப்பது ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்கின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு உறுதியாகியுள்ளது. அவருடையக் கட்சி அவருக்குத் துணையாக நிற்கிறது. ஸ்வாதி மாலிவால் வலிமையான பெண். அவர் முன்வந்து தனக்கான நீதிக்காக சட்ட ரீதியிலான பாதையைத் தேர்வு செய்வார் என நம்புகிறேன்" என்றார் அல்கா லம்பா.

உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்வாதி மாலிவால் விவகாரம் குறித்து பேச மறுப்பு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in