
இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"கர்நாடகத்தில் இருவருக்கு ஹியூமன்மெடாநிமோவைரஸ் (ஹெச்எம்பிவி) பாதிப்பு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கண்டறிந்துள்ளது. சுவாசப் பிரச்னைக்கான வைரல் கிருமியைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் வழக்கமான கண்காணிப்பின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுக்க சுவாசப் பிரச்னை குறித்து ஐசிஎம்ஆர் மேற்கொண்டு வரும் கண்காணிப்பின் பகுதியாக இது தெரியவந்துள்ளது.
ஹெச்எம்பிவி தொற்று ஏற்கெனவே இந்தியா உள்பட உலகளவில் பரவி வருகிறது.
3 மாதப் பெண் குழந்தைக்கு ஹெச்எம்பிவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பெண் குழந்தை பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் பிரான்கோநிமோனியா பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தக் குழந்தை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டது.
8 மாத ஆண்டு குழந்தைக்கு ஹெச்எம்பிவி தொற்று இருப்பது ஜனவரி 3 அன்று கண்டறியப்பட்டது. பிரான்கோநிமோனியா பிரச்னைக்காகவே இந்தக் குழந்தையும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்தக் குழந்தை தற்போது குணமடைந்து வருகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வெளிநாட்டுத் தொடர்பு எதுவும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது."
சீனாவில் ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை உண்டாக்கி வருவதால், ஆசிய நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றன.