செபி அமைப்பில் இணைந்த பிறகு ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து மாதவி புச் வருமானம் பெற்றதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம்.
அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபி' அமைப்பின் தற்போதைய தலைவர் மாதவி புச் மற்றும் அவருடைய கணவர் தாவல் புச் ஆகியோர் முதலீடு செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆகஸ்டில் செய்து வெளியிட்டு அது பெரும் சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து, செபி தலைவர் மாதவி புச் 2017-ல் செபியின் முழு நேர உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகும், 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து வருமானமாக ரூ. 16.80 கோடி பெற்றதாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா நேற்று (செப்.03) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம்சாட்டினார்.
செபி (ஊழியர்கள் சேவை) ஒழுங்குமுறைகள் 2001-ன் கீழ், செபியின் முழுநேர ஊழியர்கள் வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தும் சம்பளம் உள்ளிட்ட எந்த ஒரு பலனையும் பெறுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம். விளக்கம் பின்வருமாறு:
`ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மாதவி புச்சின் ஓய்வூதிய பலன்களைத் தவிர, வங்கி மற்றும் அதன் குழும நிறுவனங்கள் எந்த ஒரு சம்பளத்தையும், பணியாளர் பங்கு உரிமை திட்டத்தின் கீழ் பங்குகளும் வழங்கவில்லை. அக்டோபர் 31, 2013 முதல் அவர் ஓய்வுபெற்றுள்ளார். ஐசிஐசிஐ குழுமத்தில் பணிபுரிந்தபோது, கொள்கைகளுக்கு ஏற்ப சம்பளம், ஓய்வூதியப் பலன்கள், போனஸ் போன்றவற்றைப் அவர் பெற்றார்’.