
போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ல் உடன்பாடு எட்டப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அவருடன் துணை நிற்பதாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்.22-ல் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கடந்த மே 7 அன்று இந்திய பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன.
இதற்குப் பிறகு பரஸ்பர தாக்குதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், கடந்த மே 10 அன்று அமெரிக்காவின் தலையீட்டால் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதலை முழுமையாக நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள இரு தரப்பும் முடிவு செய்ததாக, மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி மாலை 6 மணியளவில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, `தேசத்துரோகி’, `நம்பிக்கைத் துரோகி’, `கோழை’ போன்ற அவதூறு வார்த்தைகளை உபயோகித்து விக்ரம் மிஸ்ரியை சமூகவலைதள வாசிகள் கடுமையாக விமர்சித்துப் பதிவிடத் தொடங்கினார்கள். அதிலும் சிலர் மிஸ்ரின் மகள் மற்றும் குடும்பத்தினரையும் சேர்த்து விமர்சித்தனர்.
இதன்பிறகு மிஸ்ரிக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் வெளியுறவு செயலர் நிருபமா ராவ், அரசியல் கட்சித் தலைவர்கள் அகிலேஷ் யாதவ், அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஐஏஎஸ் சங்கம் துணை நிற்கிறது. நேர்மையுடன் கடமைகளைச் செய்யும் அரசு ஊழியர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது, மிகவும் வருந்தத்தக்கது. பொது சேவையின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.