
நாட்டின் பாதுகாப்புத் துறையில் முக்கிய அங்கம் வகித்த மிக்-21 போர் விமானத்திற்கு விமானப்படை பிரம்மாண்ட பிரியாவிடை கொடுத்தது.
விமானப் படையின் போர் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியா, கடந்த 1963-ல் ரஷ்யாவில் இருந்து 870-க்கும் மேற்பட்ட மிக்-21 போர் விமானங்களை வாங்கியது. வாங்கப்பட்ட உடனேயே, 1965-ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் மிக்-21 போர் விமானங்கள் சிறப்பாகப் பங்காற்றின. அப்போது தொடங்கி 1999-ல் நடந்த கார்கில் தாக்குதல், 2019-ன் பால்கோட் தாக்குதல், சமீபத்தில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் வரை இப்போர் விமானங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. விமானப் படையில் கடந்த 60 ஆண்டு காலமாக முதுகெலும்பாக மிக்-21 போர் விமானங்கள் செயல்பட்டதாகப் பாராட்டப்படுகிறது.
அதே நேரத்தில் இவை 400-க்கும் மேற்பட்ட விபத்துகளையும் எதிர்கொண்டுள்ளன. இதில் திறன் வாய்ந்த விமானப்படை வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இவ்விமானத்திற்குப் பறக்கும் சவப்பெட்டி என்ற செல்லப் பெயரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. உலகில் அதிக அளவிலான மிக்-21 ரக போர் விமானங்களை இந்தியாதான் பயன்படுத்தி வந்தது. இந்நிலையில், பாதுகாப்புத் துறையில் அரசு மேற்கொண்டு வரும் பல முக்கிய முன்னெடுப்புகளின் விளைவாக, மிக்-21 ரக விமானங்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. இவற்றுக்குப் பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள் விமானப் படையில் இணைகின்றன.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ”மிக்-21, நாங்கள் உன்னை நினைவில் கொள்வோம்! இந்திய விமானப்படையின் இந்த புகழ்பெற்ற அடையாளம், தலைமுறைகள் முழுவதும் தனது வீரத்தை நிலைநாட்டியுள்ளது. அதன் இறுதிக் கௌரவப் பறப்பு ஒரு வரலாற்று சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் நிலையில், இந்திய விமானப்படை அதன் பாரம்பரியத்தைப் பெருமையுடன் கொண்டாடி, புதுமை மற்றும் வலிமையின் ஒரு துணிச்சலான புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விமானங்களுக்கு சண்டிகரில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திரா துவிவேதி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தலைமைத் தளபதி அமர்பிரீத், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விமானப் படை வீரர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டி, விமானங்களுக்குப் பிரியா விடை அளித்தனர்.