நீட் தேர்வு முடிவுகளால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக இருப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. கடந்த மே 5-ல் 4,750 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் என்சிஇஆர்டி புத்தகங்களில் இடம்பெற்ற தவறான தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் பதிலளித்த காரணத்தாலும், நேரம் வீணான காரணத்தாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் முழுமையாக 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். ஹரியாணாவில் குறிப்பிட்ட ஒரு மையத்திலிருந்து மட்டும் 6 பேர் 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள்.
இதில் முறைகேடு நடந்திருப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்கள். தேசிய தேர்வு முகமை இதை மறுத்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, நீட் தேர்வு முடிவுகள் குறித்து மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய உயர்கல்வித் துறைச் செயலர் சஞ்சய் மூர்த்தி நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"நரேந்திர மோடி இன்னும் பதவியேற்கவே இல்லை. அதற்குள் 24 லட்ச மாணவர்கள் மற்றும் அவர்களுடையக் குடும்பத்தினரை நீட் தேர்வு பாழாக்கியுள்ளது. ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். நிறைய பேர் இப்படி மதிப்பெண்களைப் பெறுவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால், இந்த அரசு வினாத் தாள் கசிவதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.
வினாத் தாள் கசிவு பிரச்னையை எதிர்கொள்ள காங்கிரஸிடம் வலுவான திட்டம் உள்ளது. கல்வித் துறை மாஃபியாக்கள் மற்றும் அரசு அமைப்புகளின் உதவியுடன் நடக்கிறது. எங்களுடைய தேர்தல் அறிக்கையில், சட்டம் இயற்றுவதன் மூலம் வினாத் தாள் கசிவிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவோம் என வாக்குறுதி அளித்திருக்கிறோம்.
நாடாளுமன்றத்தில் உங்களுடையக் (மாணவர்கள்) குரலாக இருப்பேன். உங்களுடைய எதிர்காலம் குறித்த பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். இண்டியா கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்கள். உங்களுடையக் குரல்கள் ஒடுக்கப்படுவதை இண்டியா ஒருபோதும் அனுமதிக்காது" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தில்லியில் நேற்று காலை கூடியது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்குமாறு ராகுல் காந்தியை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து விரைவில் முடிவெடுப்பதாக ராகுல் காந்தி கூறியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.