பிரதமர் மோடி கடவுளா?: ஆர்எஸ்எஸ் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் கெஜ்ரிவால்

"பிரதமர் மோடி கடவுள் என்பதை நாட்டு மக்களும் நம்புகிறார்களா?"
பிரதமர் மோடி கடவுளா?: ஆர்எஸ்எஸ் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் கெஜ்ரிவால்

பிரதமர் மோடி தன்னைத்தானே கடவுள் என்று கூறியதில் ஆர்எஸ்எஸ் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில், கடவுள்தான் தன்னை இந்த உலகுக்கு அனுப்பிவைத்ததாகக் கூறினார். இது நாடு முழுக்க மிகப் பெரிய அளவில் பேசுபொருளானது.

இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு கெஜ்ரிவால் நேர்காணல் அளித்தார். இதில், பிரதமர் மோடியின் கருத்து குறித்த ஆர்எஸ்எஸ் நிலைப்பாட்டை அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

"சமீப நாள்களாகப் பார்த்தால், பிரதமர் மோடி முற்றிலுமாக வேறொரு உலகில் இருக்கிறது. அவருடையக் கடைசி 10-12 நேர்காணல்களைப் பார்த்தால், தான் ஒரு சாதாரண மனிதன் அல்ல, கடவுளின் அவதாரம் என்பதை வெளிப்படையாகவே அவர் கூறுகிறார்.

பிரதமர் மோடி கடவுள் என்பதை நாட்டு மக்களும் நம்புகிறார்களா?. கடவுள் ராமர், கிருஷ்ணா, சிவன் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இவரை எப்படி கடவுளாக ஏற்றுக்கொள்வது?

மோடியின் ஆதரவாளர்களும் தற்போது இதைத்தான் பேசி வருகிறார்கள். ஜெந்நாதர் பிரதமர் மோடியின் பக்தர் என சம்பித் பத்ரா கூறுகிறார். ஜெ.பி. நட்டா பிரதமர் மோடியை கடவுள்களின் கடவுள் என்கிறார். இவர்களெல்லாம் எந்த உலகில் வாழ்கிறார்கள். மக்கள் துயரத்தில் இருக்கும் நேரத்தில், இவர்கள் தங்களைத் தாங்களே கடவுள் என்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தங்களுடைய தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் மௌனம் காக்கக் கூடாது. பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என ஆர்எஸ்எஸ் நம்புகிறதா?" என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in