
18வது மக்களவைத் தேர்தலில் முடிந்து புதிய எம்.பி.க்கள் பதவியேற்ற பிறகு, கடந்த ஜூன் 27-ல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர். இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று (ஜூன் 1) உரையாற்றினார்கள். இதற்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலளித்து மேற்கொண்ட உரையின் சுருக்கம் பின்வருமாறு:
நாட்டு மக்கள் எங்களுக்குத்தான் வாக்களித்தனர். 3-வது முறையாக சேவையாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை வரும் ஆண்டுகளிலும் தொடரும். தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோற்றதற்கான வேதனையை இப்போது நான் உணர்கிறேன்.
தேசத்தை முன்னேற்றும் கொள்கையும், சிறந்த நிர்வாகம் மட்டுமே எங்கள் இலக்கு. 2014-க்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதல் அதிகம். 2014-ம் வருடத்துக்குப் பின்பு தீவிரவாதிகளை அவர்கள் நாட்டுக்குச் சென்று தாக்கியுள்ளோம்.
40 ஆண்டுகளாக காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை. 1984-க்கு பிறகு ஒரு முறை கூட 250-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லவில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் 100-க்கும் குறைவான இடங்களையே பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒட்டுண்ணியாக மாறிவிட்டது.
நாட்டில் கலவரங்களை தூண்டிவிட காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. தேர்தலில் போட்டியிட பிரிவினைவாதிகளுக்கு காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது. வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் நாட்டை பிளவுபடுத்துகிறது. சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை நேற்று மக்களவையில் நாம் பார்த்தோம். பள்ளி மாணவர் போல உண்மையை சொல்லாமல் பிறரை குற்றம்சாட்டி சிலர் பேசுகின்றனர்.
இந்துக்களுக்கு எதிரானது காங்கிரஸ். இந்துக்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய தருணம் இது. அரசியல் ஆதாயத்துக்காக இந்து மதத்தை அவமதிக்கின்றனர், கேலி செய்கின்றனர். போர்ச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் முப்படைகளை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம்.
140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளின் நிறைவேற்ற ஒன்றாக இணைந்து உழைக்கலாம். எனது அரசும், குரலும் வலிமையாக உள்ளது.
தன் பதிலுரையின்போது ஹாத்ராஸில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு மோடி இரங்கல் தெரிவித்தார் மோடி. பிரதமர் மோடி பதிலளித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும் கோஷமிட்டனர்.