
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தான் எல்லா மதங்களையும் மதிப்பாகக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தனது கருத்து சமூக ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டத்தில் ஜவாரி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சேதமடைந்துள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை மாற்றி புதிய சிலையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என ராகுல் தலால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு முன் இது விசாரணைக்கு வந்தது. அப்போது, இது விளம்பரம் தேடும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்கு என்று கூறி செவ்வாயன்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறுகையில், "இது முழுக்க முழுக்க விளம்பரம் தேடும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு. ஏதாவது செய்யுமாறு கடவுளையே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் தீவிர விஷ்ணு பக்தர் என்று கருதினால், பிரார்த்தனை செய்து தியானம் மேற்கொள்ளுங்கள்" என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்த இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியது. ஹிந்து மத ஆர்வலர்கள் தங்களுடைய நம்பிக்கையை தலைமை நீதிபதி கேலி செய்துவிட்டதாக விமர்சித்தார்கள். கடவுள் விஷ்ணு மற்றும் சனாதன தர்மம் குறித்த கருத்தை தலைமை நீதிபதி கவாய் திரும்பப் பெற வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் சிலர் அவருக்குக் கடிதம் எழுதினார்கள்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் இதுகுறித்து மௌனம் கலைத்துள்ளார். "என் கருத்துகள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட ஒரு கோணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்" என்றார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், தலைமை நீதிபதி பிஆர் கவாயை எனக்குக் கடந்த 10 ஆண்டுகளாகத் தெரியும். எல்லா மதத் தலங்களுக்கும் அவர் சென்றுள்ளார் என்றார் துஷார் மேத்தா.
BR Gavai | CJI | Chief Justice of India | Chief Justice of India |