
இந்தியா பலவீனமான பிரதமரைக் கொண்டிருப்பதாக ஹெச்-1பி விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஹெச்-1பி விசா விண்ணப்பிக்க நபர் ஒருவருக்கான ஆண்டு விண்ணப்பக் கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை அழைத்துப் பணியமர்த்த, அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் ஹெச்-1பி விசா திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றன. ஆண்டுதோறும் 65 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். அமெரிக்காவில் பயின்று பட்டம் பெற்று வரும் மற்ற நாட்டினரைச் சேர்ந்தவர் 20 ஆயிரம் பேருக்கு ஹெச்-1பி விசா வழங்கப்படும்.
அரசுத் தரவுகளின்படி, கடந்தாண்டு ஹெச்-1பி விசாவுக்கான ஒப்புதலைப் பெற்றவர்களில் 71 சதவீதத்தினர் இந்தியர்கள். பணியாளர் ஒருவருக்கு விசாவுக்கான விண்ணப்பக் கட்டணமாக 1 லட்சம் அமெரிக்க டாலரைச் செலுத்த நிறுவனங்கள் தயக்கம் காட்டலாம் என்பதால், அமெரிக்காவில் ஹெச்-1பி விசா திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகவுள்ளார்கள்.
செப்டம்பர் 21 முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்கெனவே வர்த்தகம் தொடர்புடைய பிரச்னை தொடர்ந்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியர்களைப் பாதிக்கும் வகையில் மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பலவீனமான பிரதமர் எனப் பதிவிட்டுள்ளார். 2017-ல் வெளியான செய்தின் முகப்புப் படத்தைப் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி. மோடி - டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஹெச்-1பி இடம்பெறவில்லை என்பது ஒரு செய்தி. இதைப் பகிர்ந்து இந்தியா பலவீனமான பிரதமரைக் கொண்டிருப்பதாக விமர்சித்திருந்தார் ராகுல் காந்தி.
இப்பதிவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்த ராகுல் காந்தி, டிரம்பின் 1 லட்சம் அமெரிக்க டாலர் விண்ணப்பக் கட்டணம் எனும் டிரம்பின் இன்றைய செய்தியைப் பகிர்ந்து, மீண்டும் சொல்கிறேன் நாம் பலவீனமான பிரதமரைக் கொண்டிருக்கிறோம் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17 அன்று 75-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் கூறினார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருந்தார்.
Rahul Gandhi | PM Modi | H-1B Visa | Donald Trump |