இறந்துபோனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு: தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் ராகுல் காந்தி (காணொளி) | Rahul Gandhi

"நீங்கள் உயிரோடு இல்லை எனக் கேள்விப்பட்டேன்."
இறந்துபோனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு: தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் ராகுல் காந்தி (காணொளி) | Rahul Gandhi
1 min read

இறந்துபோனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் காந்தி எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி வருகிறார். கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்து வாக்குத் திருட்டு நடைபெறுவது எப்படி? எனப் பல்வேறு தரவுகளை முன்வைத்து விளக்கமளித்தார்.

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் இறந்துபோனவர்கள் என்றும் பலர் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்புடைய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொளியில் சிலருடன் உரையாடும் ராகுல் காந்தி, அவர்களுடன் இணைந்து தேநீர் அருந்துகிறார்.

காணொளியில், "நீங்கள் உயிரோடு இல்லை எனக் கேள்விப்பட்டேன். தேர்தல் ஆணையம் உங்களைக் கொன்றுவிட்டது" என்று கிண்டலாகப் பேசுகிறார் ராகுல் காந்தி. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் விடுபட்டது பற்றி எப்படி தெரியவந்தது என ராகுல் காந்தி கேட்கிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பார்த்து தான் தெரிந்துகொண்டோம் எனப் பதிலளிக்கிறார்கள்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிடுகையில், "என் வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஆனால், இறந்துபோனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைத்ததே இல்லை. இந்தத் தனித்துவமான அனுபவத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Rahul Gandhi | Congress | Lok Sabha Member | Opposition Leader | Election Commission | Bihar SIR | Bihar Voter List

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in