
நாக்பூரில் சிறுமியின் கையைப் பிடித்து 'ஐ லவ் யூ' சொன்ன வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெறுமன 'ஐ லவ் யூ' சொன்னால் பாலியல் துன்புறுத்தல் ஆகாது என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 2015-ல் 17 வயது சிறுமியின் கையைப் பிடித்து ஒருவர் 'ஐ லவ் யூ' சொல்லியிருக்கிறார். சாலையில் உறவினருடன் சென்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சிறுமியிடம் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றம் இவரைக் குற்றவாளியாக அறிவித்து, 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் (நாக்பூர் கிளை) மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், 'ஐ லவ் யூ' என்று சொல்வது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என்று தெரிவித்துள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் என்பதற்கான விளக்கத்தின் கீழ் இது வராது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது வேறு ஏதும் வழக்கு இல்லாதபட்சத்தில் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.