`தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், எம்.பி பதவி மட்டும் போதும். தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்புவதால் அமைச்சர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு’ மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டியில் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
ஜூன் 9-ல் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில் இணை அமைச்சராகப் பதவியேற்றுவிட்டு, இதற்கு அடுத்த நாளே அமைச்சர் பதவி வேண்டாம் என சுரேஷ் கோபி பேட்டியளித்ததாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் தான் இருக்கும் படத்தைப் பதிவிட்டு, இந்த சர்ச்சை குறித்துத் தன் சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் சுரேஷ் கோபி.
`மத்திய அமைச்சரவையில் இருந்து நான் விலகப்போவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. கேரள மக்களின் பிரதிநிதியாக நான் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கேரளத்தின் வளர்ச்சிக்கும், செழிப்புக்கும் உறுதிபூண்டுள்ளோம்’ எனத் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் சுரேஷ் கோபி.
நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுனில் குமாரை 74000 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.