டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பிரபல இந்திய தொழிலதிபருமான ரத்தன் டாடா நேற்று (அக்.9) மும்பையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மும்பை NCPA வளாகத்தில் இன்று வைக்கப்பட்டது.
ரத்தன் டாடாவின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
86 வயதான ரத்தன் டாடா இறுதி வரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார். தான் திருமணம் செய்துகொள்ளாதது குறித்து பிரபல இந்திய நடிகையும், இயக்குநருமான சிமி கரேவால் முன்பு தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார் ரத்தன் டாடா.
சிமி கரேவாலின் நிகழ்ச்சியில் ரத்தன் டாடா பேசியவை பின்வருமாறு:
`தொடர்ச்சியாக எனது நேரத்தை உறிஞ்சிய வேலை போன்ற பல விஷயங்கள் நான் திருமணம் செய்துகொள்வதைத் தடுத்தன. சில நேரங்களில் நான் திருமணம் செய்துகொள்ளும் கட்டத்தை நெருங்கினேன், ஆனால் அது பலனளிக்கவில்லை. பல நேரங்களில் மனைவியோ, குடும்பமோ இல்லாதது குறித்து நான் தனிமையில் இருக்கும்போது யோசித்திருக்கிறேன்.
சில நேரங்களில் அவற்றுக்காக ஏங்கியிருக்கிறேன். சில நேரங்களில் பிறருடைய உணர்வுகள் குறித்தோ அவர்களின் எண்ணங்கள் குறித்தோ கவலைப்பட வேண்டியதில்லை என்ற சுதந்திரத்தை நான் அனுபவித்துள்ளேன். வேறு சில நேரங்களில் தனிமையை உணர்வேன்’ என்றார்.