முஸ்லிம் பெண்களின் வாக்காளர் அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

மாதவி லதா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

ஹைதராபாதில் வாக்குச் சாவடியில் முஸ்லிம் பெண்களின் வாக்காளர் அடையாள அட்டையைக் கேட்டு சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் அசாதுதீன் ஒவைஸிக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிடுபவர் மாதவி லதா. ஹைதராபாதில் முதல்முறையாக பெண் வேட்பாளரைக் களமிறக்கியுள்ளது பாஜக.

தெலங்கானாவில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாதவி லதா அம்ரிதா வித்யாலயம் வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார்.

வாக்குச் சாவடிக்கு புர்கா அணிந்து வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களிடம் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொல்லியும், அவர்களுடைய முகத்தைக் காண்பிக்கச் சொல்லியும் மாதவி லதா வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்துள்ளார். இதுதொடர்புடைய காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவியது.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "நான் ஒரு வேட்பாளர். சட்டப்படி வாக்காளர் அடையாள அட்டையைச் சரிபார்ப்பதற்கான உரிமை வாக்காளருக்கு உள்ளது. நான் ஒரு பெண். எனவே, அவர்களிடத்தில் முகத்தைக் காண்பிக்கச் சொல்லி, வாக்காளர் அடையாள அட்டையைச் சரிபார்ப்பது தொடர்பாக கோரிக்கைதான் வைத்தேன். இதை வைத்து யாரேனும் பெரிய விவகாரமாக்க விரும்பினால், அதற்கு நான் அஞ்சப்போவதில்லை" என்றார் மாதவி லதா.

இந்த நிலையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய தண்டனையியல் சட்டங்களின் கீழ் 4 பிரிவுகளில் மாதவி லதா மீது மாலக்பேட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in