நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாத ஊடுருவலுக்கு வழிவகுத்த பாகு கான் என்கவுன்ட்டர்: பின்னணி என்ன? | Bagu Khan

சமந்தர் சாச்சா என்றும் அழைக்கப்படும் பாகு கான், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்திய ராணுவம் - கோப்புப்படம்
இந்திய ராணுவம் - கோப்புப்படம்ANI
1 min read

பயங்கரவாத வட்டாரத்தில் `மனித ஜிபிஎஸ்’ என்று பிரபலமாக அறியப்படும் பாகு கான் என்பவரை ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பகுதியில் வைத்து பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டர் செய்தனர்.

சமந்தர் சாச்சா என்றும் அழைக்கப்படும் பாகு கான், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வருகிறார். பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய ஊடுருவலுக்கு உதவி செய்யும் நபர்களில் முதன்மையானவரான இவர், நவ்ஷேரா நார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடுருவல் முயற்சியின்போது மற்றொரு பயங்கரவாதியுடன் சேர்த்து பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு இடையே அமைந்துள்ள குரேஸ் பகுதி வழியாக 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாத ஊடுருவல் முயற்சிகளுக்கு அவர் உதவியதாகவும், பிராந்தியத்தின் கடினமான நிலப்பரப்பு மற்றும் ரகசிய வழிகள் பற்றி அவருக்கு இருக்கும் அறிவால் பெரும்பாலான ஊடுருவல் முயற்சிகள் வெற்றிபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அனைத்து பயங்கரவாத குழுக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட நபராக பாகு கான் இருந்துள்ளார். மேலும், ஹிஸ்புல் தளபதியாக இருந்தபோது, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ​​குரேஸ் மற்றும் அண்டை பகுதிகளில் இருந்து பயங்கரவாத ஊடுருவல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் அவர் உதவினார்.

பாகு கானின் மரணம், அப்பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புகளின் தளவாட வலையமைப்பிற்கு மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது.

பந்திபோரா மாவட்டத்தின் குரேஸ் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை கடந்த ஆக. 28 அன்று இந்திய ராணுவம் சுட்டுக் கொன்ற இரண்டு நாள்களுக்குப் பிறகு நடந்த என்கவுன்ட்டரில் பாகு கான் கொல்லப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in