
நாளை (ஜூலை 24) முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கும் என்று சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக சீன மக்களுக்கு இந்திய விசா வழங்கப்படவுள்ளது.
கடந்த 2020-ல் லடாக் யூனியன் பிரதேசத்தில், சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றங்களைத் தணிக்கவும், உறவுகளை மேம்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வரும் நேரத்தில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடப்பாண்டின் தொடக்கத்தில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டன.
இரு நாடுகளும் கூட்டாக எடுத்த முடிவின் அடிப்படையில், நடப்பாண்டின் கோடையில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. கோவிட் பெருந்தொற்று மற்றும் கல்வான் தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை மற்றும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டிருந்தன.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கஸனில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஷி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருதரப்பு உறவுகள் விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பவும் மக்களை மையமாகக் கொண்ட நடவடிக்கைகளை எடுக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எல்லைதாண்டிய நதிகள் தொடர்பான தரவுகளை வழங்குதல் மற்றும் அது சார்ந்த பிற ஒத்துழைப்புகளை மீண்டும் தொடங்குதல் போன்றவை குறித்து ஆலோசிக்க நிபுணர்கள் நிலையிலான கூட்டத்தை நடத்த இந்தியா மற்றும் சீனாவின் மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர் என்று எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருந்தது.