
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அனைத்து சமூகவலைத் தளங்களையும் தடை செய்யக் கோரும் ஆட்சிப் பேரவையின் (செனட்) தீர்மானத்திற்கு பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் (எச்.ஆர்.சி.பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற தவறான நடவடிக்கைகள், கருத்து சுதந்திரத்திற்கான மக்களின் அரசியலமைப்பு உரிமையை மீறுவதாக பாகிஸ்தான் ஆட்சிப்பேரவை உறுப்பினர்களை, மனித உரிமைகள் ஆணையம் எச்சரித்ததாக பாகிஸ்தான் ஊடகமான டான் செய்தி நிறுவன்ம் வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்), டிக்டாக், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்களை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் பஹ்ராமந்த் கான் டாங்கி, ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்த பிறகு மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த அறிக்கை வந்துள்ளது.
அவர்களது எக்ஸ் தளத்தில் "அனைத்து சமூக ஊடகங்களையும் தடை செய்யக் கோரும் பொருட்டு முன்மொழியப்பட்ட தீர்மானத்தை பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் (எச்.ஆர்.சி.பி) கடுமையாக எதிர்க்கிறது. மேலும், கருத்து சுதந்திரத்திற்கான மக்களின் அரசியலமைப்பு உரிமையை மீறும் எந்தவொரு தவறான முடிவுகளும் ஜனநாயகத்தின் சுரண்டலைக் குறிக்கும் என்று மேல் சபை உறுப்பினர்களை எச்சரிக்கிறது” என்று பதிவிட்டுள்ளது.